மூன்றாவது அணியுடன் கூட்டு சேர தயாராகும் கம்யூனிஸ்ட்கள்
ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணி என்று அழைக்கப்படும் மூன்றாவது அணி தலைவர்களான சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் ஆகியோரை மா.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் கராத் மாலை சந்தித்துப் பேசினார்.
இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது அணியுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சியினரை மிரட்ட இடதுசாரிகள் புதிய வியூகம் வகுத்துள்ளது நேற்றைய சந்திப்பில் வெட்டவெளிச்சமாகிவிட்டது. அணுசக்தி ஒப்பந்த விவகாரம் குறித்து விவாதிக்க, காங்கிரஸ், ஐக்கிய முன்ணணி கூட்டணி கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழு பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நேற்று முன்தினமும் இக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில், ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் கோரினர். ஆனால், இதற்கு காங்கிரஸ் மழுப்பலாக பதில் சொல்லி, மீண்டும் நவம்பர் 16ம் தேதி கூடிப்பேசுவதாக அறிவித்துவிட்டது. இந்தச் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் அமர்சிங் வீட்டில் நேற்று நடந்தது. சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர். பின்னர் இந்த தலைவர்களை பிரகாஷ் கராத் சந்தித்தார்.
அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கராத் கேட்டுக்கொண்டார். அதை பிற தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, இடதுசாரிகளும் மூன்றாவது அணியும் கைகோர்க்க முடிவு செய்திருப்தாகத் தெரிகிறது. அமர்சிங் வீட்டுக் கூட்டத்தைத் தொடர்ந்து, சவுதாலா இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திலும் சந்திரபாபு நாயுடு, முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தை அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா புறக்கணித்தார். அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசை இடதுசாரிகளுக்கு அடுத்தபடியாக முதன்முறையாக எதிர்த்தவர் ஜெயலலிதா. மிகவும் கடுமையாக, வெளிப்படையாக எதிர்ப்பு காட்டிவருவதும் ஜெயலலிதாவே. அப்படியிருந்தும் இடதுசாரிகள் இவரை அரவணைக்கவும் இல்லை, கண்டு கொள்ளவும் இல்லை. இடதுசாரிகளிடம் முலாயமும், நாயுடுவும் சரணாகதி அடைந்திருப்பது ஜெயலலிதாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், இடதுசாரிகள் தரப்பிலிருந்து தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் பட்சத்தில் மூன்றாவது அணிக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜெயலலிதா தயாராகவே உள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூன்றாவது அணிக்கு வலு சேர்த்து, காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்கும் புதிய வியூகத்தை அமைக்க இடதுசாரிகள் தயாராகி வருவது நேற்றைய கராத் நடவடிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது.
நன்றி - தினமலர்
Wednesday, 24 October 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment